வெள்ளி, 26 ஏப்ரல், 2024

சனாதனம் – பொய்யும் மெய்யும்: முன்னுரை- இலக்குவனார் திருவள்ளுவன்

 




சனாதனம் – பொய்யும் மெய்யும்

முன்னுரை

சனாதனம் தமிழர்க்கு மட்டுமல்ல, மனித உலகிற்கே எதிரானது. ஆனால் திட்டமிட்டே சனாதனம் குறித்து உயர்வாகப் பரப்புவதால் மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் “அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு என்ன?” என்று எண்ணுகிறார்கள். சனாதனத்தால் மிகுதியாக எப்பிரிவினர் தீங்கிற்கு ஆளாகிறார்களோ அப்பிரிவினரையே அதற்கு ஆதரவாகப் பேச வைப்பதுதான் சனாதனவாதிகளின் வெற்றியாகிறது. சான்றுக்கு ஒன்று பார்க்கலாம். நேரு, பெண்களுக்குச் சொத்துரிமையில் பங்கு உண்டு எனச் சட்டம் கொண்டுவர சட்ட வரைவைக் கொண்டு வரும் பொழுது காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி பெண்களை அதற்கு எதிராகச் செயற்பட வைத்ததைச் சொல்லலாம். (ஆனால் அது வெற்றி பெறவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.) தாழ்த்தப்பட்டவர்களில் பலர் சனாதன வாதிகளுக்கு அடிமையாக இருப்பதையும் சொல்லலாம்.

சனாதனக் கருத்துகள் இடையே தமிழ் முதலிய பிற மொழிகளில் உள்ள நன்னெறி கருத்துகளைச் சனாதனத்தில் உள்ளதுபோல் புகுத்தி வருகின்றனர். பொதுவாகவே, “பிராமணர்கள் தமிழரிடத்திலிருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” என்பர், பரிதிமாற்கலைஞர்  (தமிழ் மொழியின் வரலாறு, பக்கம் 26, 27) அந்த வழியில்தான் சனாதனத்திலும் சில நல்ல செய்திகளைப் புகுத்தி அதனை உயர்வாகக் காட்ட முயல்கின்றனர். அதனைக் கேடயமாகக் கொண்டு சனாதனத் தீமைகளை மறைக்கின்றனர். தமிழ்நாட்டு அமைச்சராகவும் திமு.க. இளைஞர் அணிச் செயலாளராகவும் திகழும் உதயநிதி தாலின் சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று உவமையுடன் கூறியதும் அதைப் பெருமளவில் எதிர்த்துப் பரப்பி வருகின்றனர்.

சனாதனத்தின் தீங்கு குறித்து ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்பட்டாலும் சனாதன எதிர்ப்பாளர்களை விட சனாதன ஆதரவாளர்கள் குரலே ஓங்கி ஒலிக்கிறது. திருவள்ளுவர், கபிலர், தமிழ்ப்புலவர்கள், அருட்திரு வள்ளலார் இராமலிங்க அடிகள், ஐயா வைகுண்டர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அவர் பரம்பைக் கவிஞர்கள்  முதலியோர் சனாதன எதிர்ப்பை முழங்கி வருகின்றனர். காலந்தோறும் திகழ்ந்த சனாதன எதிர்ப்பின் தொடர்ச்சியாகத்தான் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரும் பிற தலைவர்களும் அவ்வப்பொழுது எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இப்பொழுதும் சனாதன எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. தி.க.தலைவர் வீரமணியார், விசிக தலைவர் தொல்  திருமாவளவன், தி.இ.த.பே. பொதுச்செயலாளர் சுப வீர பாண்டியன் ,  நா.உ. ஆ.இராசா, நா.உ. வெங்கடேசன்,  எனப் பலரும் எதிர்ப்புக் குரலைப் பதிந்து கொண்டு வருகின்றனர்.

நற்றமிழ் நெறிகளையெல்லாம் சனாதனம் எனப் புளுகி மக்களை ஏமாற்றி வருகின்றனர். சனாதனத்தில் இல்லாத நல்ல கருத்துகளையெல்லாம் இருப்பதாக எழுதி வருகின்றனர். ஆரியருக்கே உள்ள வழக்கத்தின்படி அதைத் தொன்மையானதாகக் கூறுகின்றனர். சனாதன எதிர்ப்பாளர்களை வன்சொற்களால் தாக்குகின்றனர். ஒருவர் தவறாகக் கூறுவதையே மற்றவரும் கூறி அதையே பரப்புகின்றனர்.

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய் போலும்மே மெய் போலும்மே!

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய் போலும்மே பொய் போலும்மே!

என்னும் வெற்றிவேற்கைக்கு எடுத்துக்காட்டாகச் சனாதனாதிகளின் பொய்மைப் பரப்புதலையும் எதிர்ப்பாளர்களின் அமைதியையும் கூறலாம். அத்தகைய பொய்யான கருத்துகளையும் அதற்கான மெய்யான விளக்கங்களையுமே ‘சனாதனம் – பொய்யும் மெய்யும் என்னும் தலைப்பில் வினா விடை முறையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வினா விடை இறுதியில் இணைப்புக் கட்டுரைகளும் தரப்பட்டுள்ளன. ஆக மொத்தம் திருக்குறளின் 133 அதிகாரங்களை நினைவு படுத்தும் வகையில் 133 தெளிவுரைகள் தரப்பட்டுள்ளன. சனாதனவாதிகள் இவற்றையும் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் இவை இணைக்கப்பட்டுள்ளன. சனாதன ஆதரவாளர்களும் சனாதன எதிர்ப்பாளர்களும் இதனைப் படிக்க வேண்டும். சனாதனவாதிகள் மனம் மாற வேண்டும். அனைவரும் சமம் என்னும் நிலையை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

தவறான செய்திகளை மேற்கோளுக்காகக் குறிப்பிடும் பொழுது அதனை அவ்வாறு கையாண்டவரே கூறியதுபோல் பரப்பி விடுகின்றனர். எனவேதான், அத்தகைய தவறான கருத்துகளைக் குறிப்பிடுகையில் என்கிறார்களே, சொல்கிறார்களே என்பன போல் தரப்பட்டுள்ளன.

சனாதனம் நிலையானதல்ல, தொன்மையானதல்ல, வருணங்களைப் பிறப்பின் அடிப்படையில்தான் கூறுகின்றனர், சனாதனத்தைப் புகழ்பவர்கள் மக்களை எவ்வாறு ஏமாற்றுகின்றனர் என்பன போன்ற பல செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. மக்கள் யாவரும் சமம், உயர்வு தாழ்வு கற்பிப்போருக்கு இவ்வுலகில் இடமில்லை என்னும் உள்ளம் கொண்டோர் இந்நூலைப் பலரிடமும் அளித்து அனைவரின் உள்ளங்களிலும் தன்மான ஒளியை ஏற்ற வேண்டும்.

இந்நூலுக்கான கருத்துகளுக்குக் காரணமான நூலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், இணையத் தளத்தினர், வலைப்பூவினர், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி.

சனாதன ஆதரவாளர்கள் சனாதனத்தின் தோல் உரித்துக்காட்டுவதற்காக என் மீது சினம் கொள்ளாமல் மூல நூல் மீது சினம் கொண்டு அவற்றை எதிர்க்க முன் வரவேண்டும். சனாதன எதிர்ப்புக் கருத்துகளுக்கான பாராட்டுகள் தன்மதிப்புடன் வாழ எண்ணிப், பிறரையும் வாழச் செய்வதற்காக முயன்ற/முயலும் கருத்தாளர்களுக்கே உரியன. அவற்றைத் தொகுத்துத் தந்ததே என் பணியாகும்.

               அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

               பேசி : 98844 81652

               மின்வரி : thiru2050@gmail.com

வியாழன், 25 ஏப்ரல், 2024

சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை

      25 April 2024      No Comment



சனாதனம் – பொய்யும் மெய்யும்

பதிப்புரை

வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர். தன்மதிப்பாளர்கள் அதனை எதிர்த்து வந்தனர். சில திங்கள் முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’  நடைபெற்றது. இதில் பேசிய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சர் உதயநிதி,  சனாதன எதிர்ப்பு மாநாடு என்று குறிப்பிடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று குறிப்பிட்டதற்குப் பாராட்டிப் பேசினார். அப்பொழுது சில தொற்று நோய்களைக் குறிப்பிட்டு அவை போல் ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம் என்றார். இதற்கு எதிர்ப்புக் குரல்களும் ஆதரவுக் குரல்களுமாகப் பெருகினன. ஒன்றிய ஆளுங்கட்சியின் ஆதரவால் சனாதனம் என்பது இதுதான் எனக் கூறி அதில் இல்லாத நல்ல கருத்துகளையெல்லாம் சனாதனம் என்றனர். இதனைக் கேட்ட நடுநிலையாளர்கள் இதுதான் சனாதனம் என்றால் ஏன் அதனை எதிர்க்க வேண்டும் என எண்ணும் அளவிற்குத் தவறான விளக்கங்களைத் தந்தனர். அதே நேரம் எதிர்ப்பாளர்களும் எதிர்ப்புக் குரலை எழுப்பி வந்தனர். ஆனால் ஆதரவுக் குரல்களை ஒப்பிடும் பொழுது எதிர்ப்புக் குரல் ஒலி குறைந்தே தோன்றுகிறது.

இந்நூலில் சனாதம் என்றால் என்ன? உண்மையில் அதன் சிறப்புகளாகக் கூறப்படுவன எல்லாம் சிறப்புகள்தாமா? அல்லது பொய்யாகப் புகழுரைகளைத் தெரிவிக்கின்றனரா? சனாதன எதிர்ப்பாளர்கள் உண்மைகளைத்தான் சொல்லுகின்றனரா? மனித நேயம் தழைக்க நாம் சனாதனத்தை ஆதரிக்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா? எனத் தெளிவாக வினா விடை முறையில் அளித்துள்ளார்; வினாக்கள் எல்லாம் சனாதனத்திற்கு ஆதரவாகத் தெரிவித்தவர்கள் முழங்கிய வரிகள். அதனை ஆராய்ந்து தெரிவிப்பதே விடைகள். எனவே, ‘சனாதனம் – பொய்யும் மெய்யும்’ எனச் சரியான தலைப்பைத் தந்துள்ளார் நூலாசிரியர் திரு. இலக்குவனார் திருவள்ளுவன்.

திரு இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் நலம் சார்ந்த கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து படைத்து வருகிறார். எழுத்திலே துணிவும் நேர்மையும் கொண்டு தமிழ் எதிர்ப்புகளுக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். பிறமொழிக் கலப்பின்றிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியும் பேசியும் வருகிறார். 2500க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். 70 நூல்கள் எழுதியுள்ளார். அகரமுதல என்னும் மின்னிதழின் ஆசிரியராக உள்ளார். தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவராகவும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணப்பாளராகவும் உள்ளார்.

சனாதனத்திற்கான விளக்கங்களை ஆரிய நூல்களில் இருந்தும் முன்னோர் கருத்துகளிலிருந்தும் திரட்டித் தம் கருத்துகளையும் அளித்து இந்நூலைச் சிறப்பாக அளித்துள்ளார் திரு இலக்குவனார் திருவள்ளுவன். சனாதன எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி ஆதரவாளர்களும் படிக்க வேண்டியது இந்நூல். வாசக நேயர்கள் ஆதரவு தருவதுடன் சனாதன எதிர்ப்பாளர்கள் இந்நூலை வாங்கிப் பலருக்கும் பரப்ப வேண்டுகிறோம்.

மலர்க்கொடி வெளியீட்டகம்

புதன், 24 ஏப்ரல், 2024

ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

 




தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்வு: சித்திரை 15, 2055 / 28.04.2024– இணைய அரங்கம் காலை 10.00

ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: மாணவர் உரைச்சுடர் செல்வி .காருண்யா

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் 

தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்ச்செம்மல் திருக்குறள் நாவை சிவம்

உலகத்தமிழ் மாமணி, முனைவர் . இரா. சிவகுமாரன், சிங்கப்பூர்

தொடர்ந்து என்னூல் திறனரங்கம் - இரு சிற்றேடுகள்

1. இலக்குவனார் நூறு

 2. திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்

ஆய்வர்:  கவிஞர் தமிழ்க்காதலன்

நிறைவுரை:  பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் மயிலை இளவரசன்


திங்கள், 22 ஏப்ரல், 2024

தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள் : இதழரங்கம்

 




தமிழே விழி!                                                                                                    தமிழா விழி!  

மிழ்க்காப்புக் கழகம்

தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள்

இதழரங்கம்

சமயம் பரப்ப வந்தாலும் தமிழைப் பரப்பியவர்கள் ஐரோப்பியத் தமிழறிஞர்கள். தமிழுக்கு வளம் சேர்த்த அவர்களின் தொண்டு அளவிடற்கரியது. நிறைகுறைகளைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல்  அறிஞர் பெருமக்களைக் குறைகூறுவோர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் முதலாகப் பலரும் உள்ளனர். எனவே ஐரோப்பியத் தமிழறிஞர்கள் குறித்த இதழ்வழிக் கருத்தரங்கத்தைத் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது.

ஐரோப்பியத் தமிழறிஞர் ஒருவரைப்பற்றியோ சிலரைப்பற்றியோ பலரைப்பற்றியோ அனைவரைப்பற்றியோ கட்டுரைகள் அனுப்பலாம்.

ஒருவரே வெவ்வேறு அறிஞர்கள் குறித்த வெவ்வேறு கட்டுரை அனுப்பலாம்.

பக்க வரையறை: குறைந்தது 4 பக்க அளவில்; கூடுதல் வரம்பு இல்லை.

கிரந்த எழுத்துகளையும் அயற்சொற்களையும் தவிர்த்துக் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். அயற்சொற்களையோ அயற்பெயர்களையோ குறிப்பிடுகையில் அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடுதல் நன்று.)

தவறான கருத்துகளுக்கு மறுப்புரை அமையலாம். ஆனால், தாக்குரை அமையக்கூடாது.

கூறியது கூறலைத் தவிர்ப்பதற்காக இவ்விதழ்அரங்கத்தில் பங்கேற்போர்

தங்களின் பெயர்

கட்டுரைத் தலைப்பு

கட்டுரையில் இடம் பெறும் அறிஞர்கள் பெயர்கள்

முகவரி

மின்வரி

பேசி எண்

ஆகிய விவரங்களை

இவ்வாண்டுச் சித்திரை 18/மே முதல் நாளுக்குள் தெரிவிக்க வேண்டுகிறோம்.

கட்டுரைகளை வைகாசி 17/30.05.2024 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டுகிறோம்.

சிறந்த கட்டுரைகளை வழங்கும் ஐவருக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பெறும். பங்கேற்பாளர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.

கட்டுரைகளுக்கான கலந்துரையாடல் எழுத்தாடலாக நடைபெறும். கருத்து பகர்வோர் குறிப்புரைகளும் தொடர்ந்து இடம் பெறும்.

கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளியிடப்பெறும். ஆதலின் அவரவர் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தையும் அனுப்ப வேண்டுகிறோம்.

பங்கேற்பு இசைவையும் கட்டுரையையும் அனுப்ப வேண்டிய மின்வரி:

madal.akaramuthala@gmail.com

தலைவர்

தமிழ்க்காப்புக்கழகம்

தொடர்பு எண்கள் : தலைவர் 98844 81652 ;  செயலர் :  80565 62267





புதன், 10 ஏப்ரல், 2024

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

 




தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், 394)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்சித்திரை 01, 2055 / 14.04.2024 இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்த்திரு த.மகராசன்

புலவர் தி.வே.விசயலட்சுமி

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

சனாதனம் – பொய்யும் மெய்யும்’

திறனாய்வர்:  எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

சனி, 6 ஏப்ரல், 2024

மலர்க்கொடிஅன்னையின்‌ மலரடிபோற்றி!

 




மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி!

யார்‌அர செனினும்‌ தமிழ்க்குக்‌ கேடெனில்‌

போர்முர சார்த்த வீறுடை மறவர்‌

இலக்குவனாரின்‌ இனிய துணையாய்‌

செருக்களம்‌ நோக்கிச்‌ செல்கென விடுத்த

தருக்குடை மறத்தி;தமிழ்நலன்‌ காக்கும்‌

விருப்புடன்‌ துணைவர்‌ சிறைக்களம்‌ புகினும்‌

பொறுப்புடன்‌ மக்கள்‌ சுற்றம்‌ காத்திடும்‌

பெருந்துணை நல்லாள்‌; இல்லம்‌ ஏகிய

மறைமலை அடிகளும்‌ திருக்குறளாரும்‌

முத்தமிழ்க்‌ காவலர்‌ கி.ஆ.பெ. அவர்களும்‌

வள்ளுவர்‌ காட்டிய வாழ்க்கைத்‌ துணையாய்‌

விருந்து பேணிடும்‌ குறள்நெறிச்‌ செம்மல்‌

என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்‌;

கலக்கம்‌ நீக்கிக்‌ கனிவைப்‌ பொழிந்து

இலக்குவர்‌ போற்றிய இனிய தமிழ்த்தாய்‌

மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி!

தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போராட்டமே உயிர்த்துடிப்பாக வாழ்ந்த தமிழ்க்காப்புப் போராளிக்குத் தக்க துணையாக விளங்கிய அந்தப் பெருந்தகையாட்டிக்குப் புகழ் வணக்கம் செலுத்துவது அவருடைய பிள்ளைகளுக்கு மட்டுமன்று; தமிழர் அனைவருக்குமே உரிய கடமையாகும்.

– முனைவர் இ.மறைமலை,

குறள்நெறி, பங்குனி 19, 2055 / ஏப்பிரல் 01, 2024, மலர்க்கொடி இலக்குவனார் நூற்றாண்டு (6.04.1924-14.12.1988நிறைவுச் சிறப்பிதழ்